"கருத்தடை சிகிச்சைக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது"
மீண்டும் கருத்தரிப்பு இருக்காது என கருத்தடை சிகிச்சைக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற மருத்துவத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை,
மீண்டும் கருத்தரிப்பு இருக்காது என கருத்தடை சிகிச்சைக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற மருத்துவத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
குடும்பக்கட்டுப்பாடு
புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ம் ஆண்டில் எனக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் 2020-ல் நான் மீண்டும் கருவுற்றேன். ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், 4-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. டாக்டர்களின் கவனக்குறைவால்தான் இவ்வாறு நடந்துள்ளது. எனவே எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் கூலி வேலை செய்து வருவதால் ஏற்கனவே 3 குழந்தைகளை வளர்ப்பதில் சிரமப்பட்டு வருவதாக கூறப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு தொடர்ந்த வழக்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்த கோர்ட்டு தலையிட விரும்பவில்லை.
ரூ.50 ஆயிரம் இழப்பீடு
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்விஅடைந்தால் ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகையை மனுதாரருக்கு வழங்க தயாராக உள்ளோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மனுதாரரைப்போல குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பல பெண்கள் மீண்டும் கருவுற்று குழந்தை பெற்றுள்ளனர்.
மனுதாரர் கருவுற்றதை அறித்ததும், தொடக்கத்திலேயே கருக்கலைப்பு செய்திருக்கலாம். ஆனால் மனுதாரர் அதனை தேர்வு செய்யவில்லை. எனவே, இதற்கான இழப்பீட்டை அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், மனுதாரரின் ஒட்டுமொத்த சூழலை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.