ரூ.202 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்கல்வி கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்


ரூ.202 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்கல்வி கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
x

அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ.202 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்கல்விக்கான கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.202.07 கோடி செலவில் பல்வேறு அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கட்டப்பட்ட உயர்கல்வி கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

சென்னை மாநில கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மாணவியருக்கான கூடுதல் விடுதி கட்டிடம், சென்னை பாரதி மகளிர் கலைக் கல்லூரியில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்.

ராணி மேரி கல்லூரி

சென்னை ராணி மேரி கல்லூரியில் 10 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறை தொகுதி கட்டிடங்கள், சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 3 கழிவறை கட்டிடங்கள், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் பல்நோக்கு அரங்கம்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விசார் கட்டிடம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் 36 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள் மற்றும் 6 கழிவறை தொகுதி கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பிற மாவட்டங்களில்...

மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், சேலம், கரூர், திருவாரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் நெல்லை மாவட்டங்களில் கட்டப்பட்ட உயர்கல்வி கட்டிடங்களையும் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.


Next Story