உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
கோத்தகிரியில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு என்ற விழிப்புணர்வு திட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியை முதல்வர் ரமேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கருத்தாளர்களாக விரிவுரையாளர்கள் வசந்தாமணி, அமுதா, ராஜு ஆகியோர் கலந்துகொண்டு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர் கல்வி குறித்தும், தோல்வியடைந்த மனாவர்களுக்கு மறு தேர்வு எழுதுவது குறித்தும், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும், கல்லூரி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை விபரங்கள் குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர், மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.