சேலத்தில் நான் முதல்வன் திட்ட மண்டல கருத்தரங்கு: மாணவர்களின் தனி திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு
மாணவர்களின் தனி திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என சேலத்தில் நடந்த நான் முதல்வன் திட்ட மண்டல கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
சேலம்
மண்டல கருத்தரங்கு
நான் முதல்வன் திட்டம் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிறப்பு பயிற்சி வகுப்புகள்
இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும் வெற்றியாளர்களாக திகழ செய்யும் வகையில் நான் முதல்வன் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இளைஞர்களின் கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல் மற்றும் பன்முக திறமையை மேம்பட செய்வதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அதிகளவில் உள்ளது. தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது தனித்திறன்களை வளர்த்து கொள்ளும் வகையில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.
Higher Education Minister Ponmudi speech
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. இதேபோல் உலகில் தலைசிறந்த சாதனையாளர்களாகவும், தமிழ்நாட்டு இளைஞர்கள் வரவேண்டும். மாணவர்களின் தனி திறமைகளை அடையாளம் கண்டு கல்லூரி பேராசிரியர்கள் அதனை மென்மேலும் ஊக்குவிக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கான செயல் வடிவத்தை கொடுக்கக்கூடிய கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முனைப்போடு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
முன்னதாக கருத்தரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் குறித்து முதல்-அமைச்சரின் செயலாளர் உதயச்சந்திரன் பேசினார். இதனை தொடர்ந்து, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி முதல்வர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பங்களிப்பு, பொறுப்புகள் மற்றும் திட்டத்தின் பயன்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, இந்த திட்ட செயலாக்க விதிகள் மற்றும் நான் முதல்வன் இணையதளத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் பேசினர்.
கருத்தரங்கில் கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.