இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் அதிக விளைச்சல்
கோத்தகிரி பகுதியில் காய்கறி சாகுபடிக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் அதிக விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் காய்கறி சாகுபடிக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் அதிக விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
தொடர் மழை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இது தவிர இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்ததால், விளைநிலங்களில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக டிராக்டர் மூலம் உழுது தயார் செய்ய தொடங்கி உள்ளனர்.
இயற்கை உரங்கள்
மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். இதன் மூலம் அதிக விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். தற்போது கோழிக்கழிவு இயற்கை உரங்களை, உழவு செய்த விளைநிலங்களில் மண்ணுடன் கலந்து இடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோத்தகிரி எரிசிபெட்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன் கூறியதாவது:-
கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்ததால் நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டு உள்ளது. எனவே மீண்டும் மலைக்காய்கறிகளை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளோம். மண்ணின் வளத்தை பாதுகாப்பதற்காக ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் காய்கறி விளைச்சல் வெகுவாக அதிகரிக்கிறது.
பீட்ரூட் சாகுபடி
இதற்காக கோழிக்கழிவு உரத்தை மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வாங்குகிறோம். 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உரத்தை விளைநிலத்திற்கு கொண்டு சேர்க்க ரூ.200 செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டை இயற்கை உரம் தேவைப்படுகிறது. விளைநிலத்தைத் தயார் செய்து பீட்ரூட் பயிரிட உள்ளேன். ஒரு ஏக்கர் நிலத்தில் பி.ஜே. புரோ ரக விதைகளை பயிரிட 3 கிலோ தேவைப்படும். 300 கிராம் கொண்ட விதை பாக்கெட்டுகள் ரூ.1,050 முதல் ரூ.1,700 வரை தரத்திற்கு தக்கவாறு கிடைக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்ய ரூ.5 ஆயிரம் செலவாகிறது. பீட்ரூட் விதைகளை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சி, மீண்டும் ஒருமுறை சாண உரத்தை போட்டு நன்கு பராமரித்து வந்தால் சுமார் 70 முதல் 80 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.