சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மலைக்கிராம மக்கள் தர்ணா
கொடைக்கானல் அருகே, சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மலைக்கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிமெண்டு சாலை
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பேத்துப்பாறை வயல் கிராமம். இந்த மலைக்கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.
பேத்துப்பாறை வயல் கிராமத்துக்கு செல்லக்கூடிய மண் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்களே முன்வந்து சாலை அமைக்கும் பணியை தொடங்கினர். இதனையடுத்து அங்கு சிமெண்டு சாலை அமைக்க, வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களாக சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது.
மலைக்கிராம மக்கள் தர்ணா
இந்தநிலையில் சிமெண்டு சாலை அமைப்பதற்கு தனிநபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தார். இதன் எதிரொலியாக தற்போது சிமெண்டு சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், சிமெண்டு சாலை அமைக்கும் இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சிமெண்டு சாலை அமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் சாலை பணி நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமலும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் தவிப்பதாக மலைக்கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
எனவே சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலை அமைக்காத பட்சத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிறிதுநேரம் கழித்து மலைக்கிராம மக்கள் தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.