பொது தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மலை கிராம மக்கள் முற்றுகை
பாஸ்மார் பெண்டா அரசு உயர்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மலை கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் இல்லை
பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அரவட்லா, கொத்தூர் மலை கிராமங்களை சேர்ந்த 76 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் கடந்த 1 வருடமாக காலியாக உள்ளது. கணிதம் பாட ஆசிரியராக உமாதேவி, தமிழ் பாட ஆசிரியராக அசோக்குமார் மற்றும் தற்காலிக ஆசிரியர்களாக 3 பேர் பணி புரிந்து வருகின்றனர்.
இதர பாடங்களான ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதே போன்று பாஸ்மார் பெண்டா மலை கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில், பாஸ்மார் பெண்டா, கொல்லை மேடு, தாம ஏரி பகுதிகளிலிருந்து 104 பேர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரவிகுமார் விபத்தில் காயமடைந்ததால் மருத்துவ விடுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனால் கடந்த 1 வருடமாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. அதேபோன்று கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.
மாணவர்கள் பாதிப்பு
மேற்கண்ட 2 உயர்நிலை பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், தலைமை ஆசிரியர் பணியை மேற்கொண்டு வரும் உதவி தலைமை ஆசிரியரும் அடிக்கடி கல்வி சம்மந்தமான கூட்டங்களுக்கு சென்று வருவதால் ஒரு ஆசிரியரே மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இதனால் மலை கிராம மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மலை கிராம பள்ளிகளை மாவட்ட முதன்மை அதிகாரி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் யாரும் வந்து ஆய்வு செய்யவில்லை என கிராம மக்கள், பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரவட்லா அரசு உயர் நிலை பள்ளியில் 18 பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளியை முற்றுகை
ஆனால் மதிப்பெண்கள் குறைந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், கிராம மக்கள் பாஸ்மார் பெண்டா அரசு உயர்நிலைப்பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர்களிடம், மதிப்பெண் குறைந்தது குறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு மாணவர்களை வேறு பள்ளியில் சேருங்கள் என ஆசிரியர் ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் 3 மாணவர்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.