`இந்தி மொழியை திணிக்க கூடாது'- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
இந்தி மொழியை திணிக்க கூடாது என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தி மொழியை திணிக்க கூடாது என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வலட்சுமி அமிதாப் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், பாஸ்கர், டேவிட் சாலமோன், லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா, தனித்தங்கம், அருண்தபசு, சத்யவாணிமுத்து, கிருஷ்ணவேணி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இந்தி மொழி திணிக்க கூடாது
இந்தி மொழி பேச முடியாத மாநில மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் வகையிலும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இந்தி மொழி தெரிந்த மக்களுக்கு மட்டுமே சாதகமான வழிவகைகள் செய்யும் வகையிலும், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளுக்கும், அந்த மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் மத்திய உள்துறை மந்திரி தலைமையிலான அலுவலர் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுவால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தக்கூடாது, என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழு வலியுறுத்துகிறது.
ரூ.3½ கோடி வளர்ச்சி பணிகள்
நெல்லை மாவட்டத்தில் ரூ.3 கோடியே 51 லட்சத்துக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 50 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மேலும் 50 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து பதாகைகள் ஏந்தி, கோஷம் எழுப்பினார்கள்.