இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வேடசந்தூரில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேடசந்துரில் நேற்று நடந்தது. இதற்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பவுர்ணமியையொட்டி மாதந்தோறும் கிரிவலம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேடசந்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன்பிறகு காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொல்வதை போல் இந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்தால், அதில் இடஒதுக்கீடு பிரச்சினை ஏற்பட்டு சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள். இந்தியா வல்லரசு நாடாக மாறும் சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கும்போது வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின்பேரில் இதுபோன்று பேசுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஆ.ராசா தரப்பினரும், போலீஸ் தரப்பில் ஒரு பிரிவினரும், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒரு தரப்பினரும் சதி செய்து வருகிறார்கள். இதன் காரணமாகவே அவர் நிம்மதி இல்லாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரதீப்குமார் கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.