இந்து முன்னணியினர் சாலை மறியல்
கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஏழை எளிய இந்து மக்களை, கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய சில கிறிஸ்தவர்கள் முயன்றதாக கூறி அவர்களை இந்து முன்னணியினர் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது. இருப்பினும் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள சேலம் மெயின்ரோட்டில் மதமாற்றம் செய்ய 20 கிறிஸ்தவர்கள் வேனில் வந்ததாக கூறி, அந்த வேனை இந்து முன்னணியினர் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து இந்து முன்னணியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.