இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் வெளிநடப்பு
குடியாத்தத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தை இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தை இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம் தாலுகா மற்றும் கே.வி.குப்பம் தாலுகா பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் குறித்து அரசியல் கட்சியினருடன் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன் தலைமை தாங்கினார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார்கள் விஜயகுமார், கீதா, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் ஜி.பி.மூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் ராஜாசெல்வேந்திரன், செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள்,
இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் டி.கே.தரணி, பி.பிரபாகரன் இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் எஸ்.சதீஷ்குமார் உள்பட விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் தனஞ்செயன், ''விநாயகர் சிலையானது பீடத்திலிருந்து 10 அடி உயரத்துக்கு மிகக்கூடாது, விநாயகர் சிலை வைக்கும் இடத்தை இரும்பு தகடால் அமைக்க வேண்டும், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது,
மத வழிபாடு மற்றும் பள்ளி, மருத்துவமனைகளுக்கு அருகே சிலைகள் வைக்கக்கூடாது என கூறினார்.
மேலும் பட்டாசுகள் வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மின்சாரத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையிடம் அனுமதி வாங்குவது குறித்தும் தெரிவித்தார்.
ெவளிநடப்பு
அப்போது இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை தடுக்கும் விதத்தில் இது போன்ற விதிமுறைகள் உள்ளது.
அனைத்து அனுமதியும் ஒரே இடத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது வாக்குவாதமும் ஏற்பட்டது.
நீங்கள் கூறும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும் இந்து முன்னணியினர் பாஜக கட்சியினர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.