சேலம் சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்
சேலம் சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அன்னதானப்பட்டி:
டாஸ்மாக் கடை
சேலம் அன்னதானப்பட்டியை அடுத்த சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் தனியார் பள்ளிக்கூடம், கோவில்கள் உள்ளன. இதனால் பள்ளிகள், கோவில் அருகில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் மாணவிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே, அதை மூடக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் சந்தைப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று காலை முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பூட்டு போட முயற்சி
இந்தநிலையில், நேற்று மதியம் 12.45 மணியளவில் இந்து மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் அங்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை பூட்டு போட முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அன்னதானப்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் இந்து மக்கள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடும் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.