வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த நாகரிகம் மற்றும் தொல்லியல் வரலாறு கொண்ட பகுதிகளில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தங்கள் பணி மூலம் மக்களுக்கு சேவை செய்தவர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் தனி முத்திரை பதித்தவர்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்று தங்களுக்கான அடையாளங்களை உருவாக்கி சென்றுள்ளனர்.

சர் தாமஸ் மன்றோ

பிரிட்டிஷ் படையில் ராணுவ வீரராக சேர்ந்து, சென்னை மாகாணத்தின் கவர்னராக உயர்ந்த சர் தாமஸ் மன்றோ 1792-ம் ஆண்டு முதல் 1799-ம் ஆண்டு வரை தர்மபுரி, சேலம், ஊத்தங்கரை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாராமஹால் பிரதேசத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார். அப்போது அவர் தர்மபுரியில் 7 ஆண்டுகள் வசித்தார்.

அந்த காலகட்டத்தில் இந்த பகுதி விவசாயிகளின் நிலத்துக்காக வசூலிக்கப்பட்ட வரி அதிகமாக இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தார். அவர் அந்த வரியை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதன் மூலம் ரயத்துவாரி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது.

தர்மபுரியில் நினைவுத்தூண்

வரி வசூலிக்க கலெக்டர் என்ற நிர்வாக பதவியை முதன் முதலில் உருவாக்கியவர் சர் தாமஸ் மன்றோ. ஏழை, எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து அவர்களுடைய நிலையை மேம்படுத்த நிர்வாகம், கல்வி, காவல் துறை ஆகியவற்றில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். நவீன கல்வி முறைக்கு முன்னோடியாக திகழ்ந்த சர் தாமஸ் மன்றோ பெண் கல்விக்கு வித்திட்டவர். தர்மபுரி பகுதியில் பல கிராமங்களுக்கு நிரந்தர குடிநீர் வசதி இவரால் ஏற்படுத்தப்பட்டது.

பெருவழி என்று அழைக்கப்பட்ட தற்போதைய தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் ஆஞ்சநேயர் கோவிலின் பின்பகுதியில் சுமார் 225 ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்யும் பயணிகளுக்கு குடிநீர் வழங்க இவர் அமைத்த குளம் மன்றோகுளம் என்று இவருடைய சிறப்பை போற்றும் வகையில் இப்போது அழைக்கப்படுகிறது. சர் தாமஸ் மன்றோவின் சிறப்பையும், புகழையும் நினைவுபடுத்தும் வகையில் தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில் மன்றோ நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சிவா

இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், சுப்பிரமணிய சிவாவிற்கு ஆதரவளித்து அவருடைய சுதந்திர போராட்ட பணிகளுக்கு உறுதுணையாக செயல்பட்ட பாப்பாரப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து முதலியார், ராணுவ பணியை விட்டு சுப்பிரமணிய சிவா உடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாளத்து சாமியார் ஆகியோர் சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

இவர்களுடைய சமாதிகள் சுப்பிரமணிய சிவா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் குறித்த வரலாற்று குறிப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்று நினைவு சின்னங்கள் குறித்து ஆய்வாளர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

முறையாக பராமரிக்க வேண்டும்

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர்:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தென்கரைக்கோட்டை தமிழகத்தில் உள்ள ஒரே தரைக்கோட்டையாகும். இங்கு 16-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்தது. இங்குள்ள தானிய களஞ்சியம், ராணி மண்டபங்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று சின்னங்கள் ஆகும். இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். புகழ்பெற்ற புனித ஸ்தலமான தீர்த்த மலையின் மேல் பகுதியில் கோட்டை கொத்தளங்கள், காணப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிக கல்வட்டங்களை கொண்ட ராசி மணல், பங்கு நத்தம் போன்ற இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

சங்க கால மன்னர்களான அதியமான்கள் கட்டியமைத்த கோட்டைகள், பருவநிலையை அறிந்து கொள்ள உதவும் சூரியக்கல், இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்ட மைல்கல் ஆகியவற்றை அரசு பாதுகாக்கும் இடங்களாக அறிவித்து கண்காணிப்பு பணியும் மேற்கொள்ள வேண்டும். பழைய கற்காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியான பண்பாட்டு களத்தை கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் கல்வெட்டுகள், அதன் வளர்ச்சி ஆகியவற்றை ஆராய வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, போதுமான நிதி உதவியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

ஆவணப்படுத்த வேண்டும்

பென்னாகரத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொன்மை நினைவு சின்னங்கள் குறித்து மாணவ- மாணவிகள், பொதுமக்களிடையே கருத்தரங்குகள், குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலக புகழ்பெற்ற சர் தாமஸ் மன்றோ தர்மபுரியில் ஆட்சி நிர்வாகத்தில் இருந்துள்ளார். அவருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணை பராமரிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வரலாற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை கொண்டு வரலாற்று சின்னங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும். தர்மபுரி அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நடு கற்கள், தொல்லியல் சின்னங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வரலாற்று குறிப்புகள்

பாப்பாரப்பட்டியை சேர்ந்த சண்முகம்:-

சுதந்திர போராட்ட தலைவர் சுப்ரமணிய சிவா பாப்பாரப்பட்டியில் வசிக்க முக்கிய காரணமாக இருந்தவர் சின்னமுத்து முதலியார். இவர் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். தனது செல்வத்தை சுதந்திர போராட்டத்திற்கு செலவழித்து, ஆதரவு கொடுத்தவர். சுப்பிரமணிய சிவா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள சின்னமுத்து முதலியார் சமாதியில் அவருடைய வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் இடம்பெற செய்ய வேண்டும். அவருடைய பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் மரியாதை செலுத்த வேண்டும். அந்த நினைவிடத்தை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும்.

தர்மபுரியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் முகிலன்:-

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி முக்கிய பங்கு வகித்துள்ளது. சுப்ரமணிய சிவா உடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாளத்து சாமியார் சமாதி சுப்ரமணிய சிவா நினைவிடம் அருகில் அமைந்துள்ளது. ஆனால் அவரை பற்றிய வரலாற்று குறிப்புகள் இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் வெளியாகவில்லை. அவருடைய விவரங்களை சேகரித்து இளைய தலைமுறையினருக்கு இந்த பகுதியின் சிறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story