6 பேரை பிடித்து போலீசார் விசாரணை
குடவாசல் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்;
குடவாசல் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில். பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் திருவாரூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு காரில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வக்கீல் அகிலன் மற்றும் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த வக்கீல் பாரதிராஜா ஆகியோருடன் கும்பகோணம் நோக்கி வந்தார்.குடவாசல் அருகே நாகலூர் என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது பின்னால் வந்த கார் இவர்கள் பயணித்த காரின் பக்கவாட்டில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
வெட்டிக்கொலை
இதைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், செந்தில் பயணித்த கார் கண்ணாடியை உடைத்து அவரை காரில் இருந்து இழுத்து வெளியே போட்டு சரமாரியாக தலையில் அரிவாளால் வெட்டினர்.இதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே செந்தில் உயிரிழந்தார். மேலும் வக்கீல் அகிலனையும் அந்த கும்பல் தலை மற்றும் கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடியது.
6 போி்டம் விசாரணை
இது குறித்த தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வந்து வக்கீல் அகிலனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செந்தில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கொலையாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்தார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் வலங்கைமான் பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.