எச்.ஐ.வி. நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்
ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து, ரூ.32.5 லட்சம் செலவில் 5 ரத்த சுத்திகரிப்பு அலகுகளுடன் புதிய ரத்த சுத்திகரிப்பு மையத்தையும் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 324 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இலவச ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு 0.22 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. பாதிப்பு 0.17 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 976 தொற்று கண்டறியும் நம்பிக்கை, 68 ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.
சீர்மிகு மருத்துவத் திட்டம்
2023-24 மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை ரூ.2 கோடி செலவில் அனைத்து நகர்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் என்ற திட்டம் கடந்த ஜூலை மாதத்தில் சேலத்தில் உள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி முதல் ஜூலை மாதம் 20-ந்தேதி வரை 5 லட்சத்து 9 ஆயிரத்து 664 பேர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 83 ஆயிரத்து 430 பேர் துணை சுகாதார நிலையத்திலும் என மொத்தம் 5 லட்சத்து 93 ஆயிரத்து 94 பேர் பயனடைந்துள்ளனர்.
ரத்த சுத்திகரிப்பு மையம்
2023-24-ம் ஆண்டு மானியக்கோரிக்கை அறிக்கையில், வந்தவாசி, திட்டக்குடி, குளித்துறை, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் 50 ரத்த சுத்திகரிப்பு உபகரணங்கள் ரூ.3.25 கோடி செலவில் நிறுவப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று ரூ.32.5 லட்சம் செலவில் 5 ரத்த சுத்திகரிப்பு அலகுகள் வழங்கப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிய ரத்த சுத்திகரிப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குனர் ஹரிஹரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.