வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-பரிசலில் சென்று உற்சாகம்
பென்னாகரம்:
வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் உற்சாகமாக சென்று மகிழ்ந்தனர்.
மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கண்காணித்தனர்.