ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் முறையாக வழங்க வேண்டும்
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என்று உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் பூசாராணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கே.ரேவதி வரவேற்றார். கூட்டத்தில் மொத்தம் 19 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கும் தொட்டி மூலமாக பேரூராட்சி பகுதிகளுக்கு தினந்தோறும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும், ஆனால் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கூட வருவதில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சப்ளை செய்யும் தொட்டி பகுதியில் மீட்டர் மற்றும் தானியங்கி ஸ்விட்ச் அமைத்து சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் அ.செல்வராஜ், மரிய ஜோசப், சரவணன், கீதா ஜெகன், ரஞ்சனி, பரிமளா முருகவேல், லில்லி கோபி உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி எழுத்தர் சி.குமார் நன்றி கூறினார்.