மழைநீர் வடியாததால் அரசு பள்ளிக்கு விடுமுறை


மழைநீர் வடியாததால் அரசு பள்ளிக்கு விடுமுறை
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மழைநீர் வடியாததால் அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திரும்பி சென்றனர்.

தேனி

பள்ளியில் தேங்கிய தண்ணீர்

தேனி அருகே குன்னூரில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

சில நாட்களாக பெய்த கனமழையால் பள்ளி வளாகத்திலும், குன்னூரில் குடியிருப்பு பகுதியிலும் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் கடந்த சனிக்கிழமை இரவில் குன்னூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். அப்போதும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் வடியாமல் குளமாக கட்சி அளித்தது.

மாணவர்களுக்கு விடுமுறை

பள்ளி ஆசிரியர்களும் தண்ணீரில் இறங்கி வகுப்பறைக்குள் சென்றனர். தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலைமை இருந்ததால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த மாணவ, மாணவிகள் தங்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "ஊரில் ஒரு பகுதியில் மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதியில்லை. அதுபோல் பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேறவும் முறையான வசதி இல்லை. இதற்கான வடிகால் வசதி செய்ய வேண்டும். தற்காலிக தீர்வாக மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தான் எங்கள் ஊர் அமைந்துள்ளது. ஆனால், அடிப்படை வசதிகளில் தொடர்ந்து பின்தங்கி வருகிறோம்" என்றனர்.


Next Story