புனித சலேத் அன்னை ஆலய திருவிழா
கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய திருவிழா நடந்தது.
கொடைக்கானலில் பிரசித்திபெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புனித சலேத் அன்னை ஆலயத்தின் 157-ம் ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தேவாலயத்தில் தினமும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு அன்னையின் பெருவிழா திருப்பலி, மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார பங்கு தந்தை சிலுவை மைக்கேல்ராஜ், பங்கு தந்தையர்கள் பிரேம் ஜான்சன், நிக்கோலஸ், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வின் மனைவி மெர்சி செந்தில்குமார், கொடைக்கனால் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன்பிறகு மின்தேர் பவனி நடைபெற்றது.
அப்போது தேர்களில் மைக்கேல் ஆண்டவர், ஏசு பிரான், குழந்தை ஏசு மற்றும் சலேத் அன்னை திருவுருவமாய் எழுந்தருளினர். இந்த மின்தேர் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளில் உலாவந்து நேற்று அதிகாலை மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை சப்பர பவனி நடைபெற்றது. பின்னர் திருஇருதய ஆலயத்தில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், இயக்கத்தினர் செய்திருந்தனர்.