புனித தோமையார் ஆலய திருவிழா தேர்பவனி
ஆத்தூர் அருகே புன்னக்காயல் புனித தோமையார் ஆலய தேர்பவனி நேற்று நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே புன்னக்காயல் புனித தோமையார் ஆலய தேர்பவனி நேற்று நடந்தது.
புனித தோமையார் ஆலயம்
ஆத்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான புன்னக்காயல் புனித தோமையார் ஆலய திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற திருப்பலியை சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை செல்வன் அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடந்தது. 14-ந் தேதி காலை 9 மணிக்கு புன்னக்காயல் பங்கு தந்தை தா.சகாய அந்தோணி டைட்டஸ், உதவி பங்குத்தந்தை விமல் ஆகியோர் திருப்பயணிகளுக்கான சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். இந்த ஆலயம் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ளதால் ஏராளமானவர்கள் வெளியூர்களில் இருந்து படகுகள் மூலமும், ஆற்று தண்ணீரில் இறங்கி நடந்தே சென்றும் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
தேர்பவனி
நேற்று முன்தினம் மாலையில் திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி சிறுமலர் குறுமட அதிபர் உபர்ட்டஸ் அடிகளார் நடத்தினார். நேற்று காலை 10-ம் நாள் ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. முன்னாள் உடன்குடி பங்குத்தந்தை விக்டர் லோபோ அடிகளார் தலைமை நடத்தினார். திருப்பலி மறையுரையை தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கத்தின் நிதி நிர்வாகி ஜான் சுரேஷ் அடிகளார் நிகழ்த்தினார். காலை 10 மணியளவில் ஆலயத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் புனித தோமையாரின் உருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெற்றது.
திரளானவர்கள்
இதில் புன்னக்காயல், ஆத்தூர், மரந்தலை, ஏரல், முக்காணி, குருவித்துறை, குரும்பூர், தூத்துக்குடி, ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை மற்றும் ஊர் கமிட்டியினர் செய்து இருந்தனர்