வீடு புகுந்து துப்பாக்கி முனையில் டிரைவரிடம் 20 பவுன் நகை கொள்ளை


வீடு புகுந்து துப்பாக்கி முனையில் டிரைவரிடம் 20 பவுன் நகை கொள்ளை
x

நாகர்கோவிலில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் டிரைவரிடம் 20 பவுன் நகையை பறித்து பர்தா அணிந்த கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் டிரைவரிடம் 20 பவுன் நகையை பறித்து பர்தா அணிந்த கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

தனியாக இருந்த டிரைவர்

நாகர்கோவில் வேதநகர் ரோடு மேலப்புது தெருவை சேர்ந்தவர் உமர் பாபு (வயது 53), வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவருடைய மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்தநிலையில் உமர்பாபுவின் மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆகியோர் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். இதனால் வீட்டில் உமர்பாபு மட்டும் தனியாக இருந்தார்.

குடும்பத்தினர் அதிர்ச்சி

சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெளியே இருந்த விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. உடனே ஜாஸ்மின் அவரது கணவரின் பெயரை கூறி கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

மேலும் வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. ஏதோ அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதோ என நினைத்த குடும்பத்தினர் கதவை வேகமாக தட்ட தொடங்கினர். அந்த சமயத்தில் கதவு திறக்கப்பட்டது. உள்ளே இருந்து பர்தா அணிந்த நிலையில் 2 பேர் வெளியே வந்தனர். இவர்களை பார்த்ததும் ஜாஸ்மின் ஒரு நிமிடம் திகைத்து போனார்.

கட்டிப்போட்டு...

நீங்கள் யார்? என்னுடைய வீட்டுக்குள் இருந்து வருகிறீர்களே? என் கணவர் எங்கே? என கேள்வி கணைகளை கேட்டு துளைத்தெடுத்தார். உடனே பர்தா அணிந்திருந்தவர்கள், நாங்கள் உங்களுடைய உறவுக்காரர்கள் என்று கூறியுள்ளனர்.

மேலும் உமர்பாபு திடீரென கீழே விழுந்து விட்டார். அவரை மேலே உள்ள அறையில் வைத்திருக்கிறோம், நீங்கள் பயப்பட வேண்டாம், வீட்டுக்குள் செல்லுங்கள் என ஒருவர் கூறியுள்ளார். ஆனால் ஜாஸ்மின் நேராக உமர் பாபுவை பார்க்க மாடிக்கு சென்றார். அங்கு உமர்பாபுவின் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வாயை பிளாஸ்திரியால் மூடப்பட்ட நிலையிலும் இருந்தார். இதை பார்த்து திடுக்கிட்ட ஜாஸ்மின் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சத்தம் போட்டனர்.

காரில் தப்ப முயன்ற கும்பல்

அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்து அடுத்தடுத்து பர்தா அணிந்த நிலையில் சிலர் வெளியே ஓடியபடி இருந்தனர். இதனை கவனித்த ஜாஸ்மின் திருடன், திருடன் என அலறினார்.

வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிய 5 பேர் கொண்ட கும்பல் வெளியே நின்ற காரில் ஏறி தப்ப முயன்றது. இதற்கிடையே ஜாஸ்மின் குடும்பத்தினரின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் திரண்ட பொதுமக்கள், இளைஞர்கள் சுதாரித்துக் கொண்டு காரில் தப்ப முயன்ற கும்பலை மடக்கினர்.

ஒருவர் சிக்கினார்

இதனால் காரை சாலையோரம் நிறுத்திய கும்பல் அதிலிருந்து இறங்கி தப்பி ஓடியது. உடனே இளைஞர்கள் அவர்களை விரட்டினர். இதில் ஒருவரை மடக்கி பிடித்தனர். ஆனால் 4 பேர் தப்பி விட்டனர். பிடிபட்ட நபருக்கு 25 வயது இருக்கும்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த மர்ம நபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் வீட்டில் ஆய்வு செய்த போது வீடு முழுவதும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வீட்டுக்குள் கொள்ளையர்கள் பயன்படுத்திய கை துப்பாக்கி, அரிவாள், பர்தா போன்றவை கிடந்தன.

துப்பாக்கி முனையில் கொள்ளை

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், 5 மர்ம ஆசாமிகள் பர்தா அணிந்த நிலையில் உமர் பாபு வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கி முனையில் பணம், நகைகள் எங்கே இருக்கிறது? என மிரட்டியுள்ளனர்.

அப்போது கொசுவை அழிக்க பயன்படுத்தும் மின்சார பேட்டை பயன்படுத்தியும் தாக்கியுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்ப முயன்ற சமயத்தில் தான் உமர்பாபு குடும்பத்தினர் வந்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த கொள்ளையர்கள் தப்பிக்க முயன்ற போது துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போட்டுவிட்டு தப்பியுள்ளனர். உமர்பாபு வீட்டை வெகுநாட்களாக நோட்டமிட்டு கைவரிசை காட்டியதை போன்று கொள்ளை கும்பலின் செயல்பாடு உள்ளது. ஏனென்றால் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரும் பர்தா அணிந்து வந்து திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் உமர்பாபுவின் குடும்பத்தினர் வந்து விட்டதால் கொள்ளை கும்பலின் திட்டம் தோல்வி அடைந்தது. ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பி விட்டனர். தப்பி ஓடியவர்களில் ஒருவர் பெண் போல் பேசியதாக ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு

மேலும் கொள்ளையர்கள் வீட்டில் விட்டு சென்ற துப்பாக்கி உள்ளிட்டவற்றையும், காரையும் போலீசார் கைப்பற்றினர். வீடு புகுந்து துப்பாக்கி முனையில் டிரைவரை கட்டிப் போட்டு 20 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பல் தப்ப முயன்ற போது ஒருவர் பிடிபட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story