வாலிபர் கொலை வழக்கில் ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் ஊர்க்காவல்படை வீரர்  உள்பட 3 பேர் கைது
x

ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்படை

தென்காசி மாவட்டம்் ஆலங்குளம் அருகே கருவந்தா கிராமத்தில் கடந்த 3-ந் தேதி கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த கொடை விழாவையொட்டி நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அண்ணாதுரை மகன் சேதுபதி (வயது 20) என்ற வாலிபர் தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். அன்று இரவு கும்பல், சேதுபதியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதில் சேதுபதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துமலை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சந்திரசேகர், ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

3 பேர் கைது

இந்தநிலையில் கொலை ெதாடர்பாக கருவந்தா கோட்டை தெருவை சேர்ந்த சேர்மராஜா (27), மணிகண்டன் (25), சாமுவேல் சுகுமார் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் சேர்மராஜா என்பவர் ஊர்க்காவல் படை வீரர் ஆவார். கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காரணம் என்ன?

சம்பவத்தன்று கோவில் கொடை விழாவின்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சேதுபதி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சேர்மராஜா மற்றும் நண்பர்கள் இதுபற்றி சேதுபதியிடம் கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே 3 பேரும் சேர்ந்து சேதுபதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story