ஊட்டியில் குதிரை பந்தயம் தொடங்கியது
ஊட்டியில் குதிரை பந்தயம் தொடங்கியது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் குதிரை பந்தயம் தொடங்கியது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கோடை சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனை அனுபவிக்கவும், மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவர்களை கவரும் வகையில் கோடை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 14-ந் தேதி (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக அனைத்து போட்டிகளையும் நடத்த முடியாமல் போனது. இதனால் நடப்பாண்டில் முன்கூட்டியே 1-ந் தேதி முதல் (அதாவது நேற்று) குதிரை பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
குதிரை பந்தயம்
இந்தநிலையில் நேற்று 136-வது குதிரை பந்தயம் ஊட்டியில் தொடங்கியது. முதல் நாளான நேற்று 8 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. முதல் போட்டியில் சாண்டாமரினா ஸ்டார் குதிரை வெற்றி பெற்றது. நீலகிரி முனிசிபாலிட் கோப்பைக்கான போட்டியில் 10 குதிரைகள் பங்கேற்றன. இதில் ராயல் ஐகான் குதிரை வெற்றி பெற்றது.
குதிரையின் உரிமையாளர் எம்.ஏ.எம்.ராமசாமி அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 250, பயிற்சியாளர் பி.சுரேசுக்கு ரூ.45 ஆயிரம், ஜாக்கி சி.உமேசுக்கு ரூ.33,750 பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு கோப்பையை வழங்கினார். இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது. மழை காரணமாக வெல்கம் கோப்பைக்கான 7 மற்றும் 8-ம் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
கண்டு ரசிப்பு
குதிரை பந்தயத்தில் 37 ஜாக்கிகள், 24 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மொத்தம் ரூ.6 கோடியே 70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஊட்டியில் குதிரை பந்தயம் மே மாதம் 28-ந் தேதி வரை நடக்கிறது.
ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கேலரிகளில் அமர்ந்து இருந்து கண்டு ரசித்தனர். மேலும் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.