ஊட்டியில் நாளை குதிரை பந்தயம் தொடக்கம்
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.
ஊட்டி
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.
குதிரை பந்தயம்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது அவர்களின் கோடை வாசஸ்தலமாக ஊட்டி விளங்கியது. ஆங்கிலேயர் பொழுதுபோக்கிற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குதிரை பந்தயத்தை நடத்தினர். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குதிரை பந்தயம் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு தமிழ் புத்தாண்டில் தொடங்குவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக அனைத்து போட்டிகளையும் நடத்த முடியாமல் போனதால், இந்த ஆண்டு முன்கூட்டியே போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான குதிரை பந்தயம் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான மைதானம் தயார் நிலையில் உள்ளது.
ரூ.6¾ கோடி பரிசு
இதுகுறித்து ரேஸ் கிளப் நிர்வாகிகள் கூறியதாவது:–-
ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை(சனிக்கிழமை) தொடங்கி மே மாதம் 28–-ந் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதத்தில் 1, 8, 9, 14, 15, 22, 23, 29, 30 மற்றும் மே மாதத்தில் 6, 7, 13, 14, 20, 21, 27, 28 என மொத்தம் 17 நாட்கள் நடைபெறும். இதில் முக்கிய குதிரை பந்தயங்களான ஆயிரம் கின்னீஸ் பந்தயம் வருகிற 14-–ந் தேதியும், 2 ஆயிரம் கின்னீஸ் பந்தயம் வருகிற 15-–ந் தேதியும் நடக்கும். மேலும் நீலகிரி டர்பி பந்தயம் மே மாதம் 7–-ந் தேதியும், புகழ்பெற்ற நீலகிரி தங்ககோப்பைக்கான பந்தயம் மே 21-–ந் தேதியும் நடக்கும். இதில் மொத்தம் ரூ.6 கோடியே 70 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படுகிறது.
37 ஜாக்கிகள்
இந்த குதிரை பந்தயத்தில் 37 ஜாக்கிகள், 24 பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் மைசூரு, ஆந்திரா, பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இருந்து சுமார் 550 குதிரைகள் பங்கேற்கின்றன. கோடை விழாவின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த குதிரை பந்தயம் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.