போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகள்
தாராசுரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்
கும்பகோணம்:
தாராசுரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்
பைபாஸ் சாலை
கும்பகோணம் தாராசுரம் பைபாஸ் சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து கும்பகோணம் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களும் கும்பகோணம் நகருக்குள் நுழையாமல் பைபாஸ் சாலை வழியாக சென்று வருகின்றனர்.
சுற்றித்திரியும் குதிரைகள்
இந்த நிலையில் கும்பகோணம் பைபாஸ் சாலை பகுதியில் ஏராளமான குதிரைகள் சுற்றித்திரிகின்றன. சாலை நடுவே போக்குவரத்து இடையூறாக குதிரைகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பைபாஸ் சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலை நடுவே குதிரைகள் நிற்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
பிடிக்க வேண்டும்
சில நேரங்களில் குதிரைகள் சாலையில் நடுவே அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராசுரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குதிரைகளை சுற்றித்திரிய விடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.