போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்
கூத்தாநல்லூரில் போக்குவரத்து இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் போக்குவரத்து இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய வழித்தடம்
கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி சாலை, திருவாரூர், மன்னார்குடி, நாகை, தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, கும்பகோணம், காரைக்கால் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம். இந்த சாலையில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி மாடுகள் சுற்றித்திரிந்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. நாளடைவில் மாடுகள் சுற்றித்திரிவது குறைந்தது.
சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றித்திரிகின்றன.
வேளுக்குடி பாலத்தில் இருந்து லெட்சுமாங்குடி வரை 6 கி.மீ. தூரத்திற்கு இந்த குதிரைகள் சாலையில் சுற்றித்திரிக்கின்றன.
இந்த குதிரைகள் சாலையில் வரிசையாக நின்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில் சாலையில் குதிரைகள் படுத்துகொள்வதால் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.
விபத்து ஏற்படுகிறது
மேலும், வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென குதிரைகள் துள்ளிக் குதித்து ஓடும் போது விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர். இதுபோன்று அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.