கலெக்டரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த தோட்டக்கலைத்துறை ஊழியர்கள்
ஊதிய உயர்வு கேட்டு ேஷன் கார்டை கலெக்டரிடம் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஒப்படைக்க வந்தனர். அவர்கள் பாடை கட்டி ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
ஊதிய உயர்வு கேட்டு ேஷன் கார்டை கலெக்டரிடம் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஒப்படைக்க வந்தனர். அவர்கள் பாடை கட்டி ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊதிய உயர்வு
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும், தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்களுக்கு தினசரி ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலை துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தினமும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம், கஞ்சி தொட்டி திறப்பு மற்றும் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்புதல் என முத்தரப்பு போராட்டத்தை கையில் எடுத்தனர். நேற்று கோரிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கருப்புசாமி, துணை இயக்குனர்கள் சிபிலா மேரி, ராதாகிருஷ்ணன், பாலசங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. எனவே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என்று ஊழியர்களிடம், அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் ஊழியர்கள் வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாக வழங்கினால் மட்டுமே போராட்டத்தை முடிப்போம் என்று உறுதியாக கூறினர். இதனால் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பதில் அளிப்பதாக அதிகாரிகள் கூறி சென்றனர்.
பாடை கட்டி ஊர்வலம்
இதையடுத்து ஊழியர்கள் பாடை கட்டி, அதில் தங்களது ரேஷன் அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை போட்டு, மாவட்ட கலெக்டரிடம் அளிக்க ஊர்வலமாக சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸ் துணை சூப்பரண்டு யசோதா தலைமையிலான போலீசார் தடுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் வாகனம் மூலம் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல வலியுறுத்தினர்.
இதையடுத்து ஊழியர்கள் சிலர் மட்டும் பாடை கட்டி தூக்கி வந்த ரேஷன் அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை கலெக்டர் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு கலெக்டர் இல்லாததால் தங்கள் கோரிக்கை மனுவை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியாவிடம் கொடுத்துவிட்டு திரும்பினர். போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.