நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமுடன் இருக்கிறார்
நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர் தெரிவித்தார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை நேற்று முன்தினம் டெல்லி சென்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் நேற்று முன்தினம் மாலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால், அவருடைய குடும்பத்தினர் போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு உடல்நிலை சீரானது.
அமைச்சர் உடல் நலம் விசாரித்தார்
இந்தநிலையில் நேற்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, டாக்டர்கள் குழுவிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராமசந்திரா ஆஸ்பத்திரியின் இருதயவியல் டாக்டர் மூர்த்தி ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, டாக்டர். மூர்த்தி கூறியதாவது:-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லி சென்று திரும்பிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருமல் அதிகமாக இருந்தது. லேசான நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது நலமுடன் உள்ளார். ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார்.
உடல்நிலை சீராக உள்ளது
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது இயல்பாக உள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கி இருக்கிறோம். தொடர்ந்து அவருக்கு சிகிச்சையாக வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதோடு, உடல்நிலை சீராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.