ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் எடிசன்(வயது 50). இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளி சென்றுள்ளார். அப்போது பாதி மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணுக்கு ராபர்ட் எடிசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட ராபர்ட் எடிசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி வழக்குப்பதிவு செய்து ராபர்ட் எடிசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் ராபர்ட் எடிசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.