குமரியில் கடும் வெயிலால் ரப்பர் பால் உற்பத்தி குறைவு
குமரி மாவட்டத்தில் கடும் வெயில் அடித்து வருவதால் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது.
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் கடும் வெயில் அடித்து வருவதால் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. அத்துடன் ரப்பர் ஷீட்டின் விலையும் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மண்ணின் ஈரப்பதம் குறைவு
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து வருவதுடன், வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரப்பர் மரங்களைப் பொறுத்த வரை தொடர் மழை பெய்தாலும் பால் வடிக்க முடியாது. அதே வேளையில் மழை பெய்யாமல் நிலம் வறண்டாலும் மரங்களில் இருந்து பால் கிடைக்காது. மாவட்டத்தில் இலையுதிர் காலத்திற்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ரப்பர் தோட்டங்களில் பால் வடிப்பு தொடங்கப்பட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களில் மிதமாக மழை பெய்து வந்ததால் ரப்பர் மரங்களில் இருந்து இயல்பான அளவுக்கு பால் கிடைத்து வந்தது.
உற்பத்தி குறைவு
இந்தநிலையில் ஜூலை மாதம் முதல் மழை பொய்த்துப் போய் கடும் கடும் வெயில் நிலவி வருவதால் ரப்பர் பால் உற்பத்தி 50 சதவிகிதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்குக் கூட வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் ரப்பர் ஷீட்டின் விலை கடந்த ஒரு மாத காலமாக குறைந்து வருகிறது.
விலை நிலவரம்
ஆகஸ்டு மாத தொடங்கத்தில் குமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ.148 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோ ரூ.144.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ.120.50 ஆகவும் இருந்தது.
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்த விலை முறையே ரூ.143, ரூ.138, ரூ.117 ஆக இருந்தது. மேலும் நேற்றைய ரப்பர் வாரிய விலையாக ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.148 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.143 ஆகவும், ஐ.எஸ்.என்.ஆர். 20 ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.127 ஆகவும், லேட்டக்ஸ் (60 சதவீதம்) விலை கிலோவிற்கு ரூ. 121 ஆகவும் இருந்தது.
வறட்சி காரணமாக ரப்பர் பால் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் மறுபுறம் விலை சரிவு ரப்பர் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
--