வேலூர் கோட்டையில் ரூ.3 கோடியில் ஓட்டல்
சுற்றுலா பயணிகளுக்காக வேலூர் கோட்டையில் ரூ.3 கோடியில் ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டை
வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதுதவிர கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கும் பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் வேலூர் கோட்டையில் பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என்று தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
ரூ.3 கோடியில் ஓட்டல்
கோட்டையில் ஓட்டல் வசதி இல்லாததால் வெளி மாவட்ட மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிரமடைந்துள்ளனர். எனவே அவர்களின் வசதிக்காக ஓட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே ரூ.3 கோடி மதிப்பில் ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகத்தில் உள்ள வரலாற்று சுற்றுலா தளங்களில் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்காக ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் பணிகளை தவிர அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. டெண்டர் விடப்பட்டு ஓட்டல் திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 50 முதல் 60 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.