நகைக்காக விடுதி மேலாளர் கொலை


நகைக்காக விடுதி மேலாளர் கொலை
x

நகைக்காக விடுதி மேலாளர் கொலை-ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது

மதுரை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 50). இவர் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மேலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று காலை அங்குள்ள அறை ஒன்றில் தர்மராஜ் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தார்.வேலைக்கு வந்த ஊழியர்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திடீர்நகர் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தர்மராஜ் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி என சுமார் 6 பவுன் நகையை காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவரது கழுத்தில் காயம் இருப்பதும் தெரியவந்தது. எனவே அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வந்தனர்.மேலும் அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு விடுதியை காலி செய்த வாடிக்கையாளர்களுக்கு தர்மராஜ் ரசீது வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் தான் அவர் இறந்து இருக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து அந்த நேரத்தில் விடுதியில் இருந்து காலி செய்து வெளியேறி சென்றவர்கள் குறித்து விசாரித்தனர். இதில் ராஜஸ்தானை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை செல்போனில் ெதாடர்பு கொண்டு பேசியபோது, அவர் விருதுநகர் பகுதியில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தனியார் பஸ்சில் சென்ற கோபாலகிருஷ்ணனை நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தர்மராஜ் அணிந்திருந்த நகைகளும் மீட்கப்பட்டன.

விடுதியில் மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு உடனடியாக அதில் தொடர்பு உடையவரை சில மணி நேரத்தில் கைது செய்திருப்பது குறிப்பிடக்தக்கது. மேலும் போலீசார் இந்த சம்பவத்தில் தர்மராஜ் நகைக்காக ெகாலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story