மனைவியை கொன்ற ஓட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை


மனைவியை கொன்ற ஓட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை
x

திருச்சியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற ஓட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி

திருச்சியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற ஓட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வரதட்சணை கொடுமை

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 44). இவரது மனைவி இளையரசி (42). அதேபகுதியில் ஓட்டல் நடத்தி வந்த இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஓட்டல் தொழிலை விரிவாக்கம் செய்ய காமராஜுக்கு பணம் தேவைப்பட்டது.

இதனால் மனைவியிடம் வரதட்சணை வாங்கி வருமாறு அடிக்கடி தகராறு செய்ததுடன், பூரிக்கட்டையால் அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

கடந்த 9.4.2018 அன்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த காமராஜ், வரதட்சணை கேட்டு மனைவியிடம் தகராறு செய்ததுடன், பூரி கட்டையால் மனைவியை கடுமையாக தாக்கினார். அப்போதும் ஆத்திரம் தீராத காமராஜ் மனைவியின் கழுத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் அப்போதைய சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் (தற்போது ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு) வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் சாகீர் உசேன் ஆஜரானார்.

ஆயுள்தண்டனை

இதில் குற்றம் சாட்டப்பட்ட காமராஜுக்கு மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 6 மாதம் சிறைதண்டனையும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 3 மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு நிராதரவாக தவிக்கும் குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story