ஓட்டல் தொழிலாளி வெட்டிக் கொலை; மேலும் 3 பேருக்கு அரிவாள் வெட்டு


ஓட்டல் தொழிலாளி வெட்டிக் கொலை; மேலும் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்விரோதம்

தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் காமராஜ் நகரில் கருப்பசாமி என்பவர் சொந்தமாக புரோட்டா கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முடிவைத்தானேந்தல் ஓதுவார் தெருவை சேர்ந்த பொன்செந்தில் முருகன் (வயது 31), தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்த தேவராஜ் (39), சாயர்புரத்தை சேர்ந்த சாமுவேல் (37) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

புரோட்டா கடைக்கு எதிரே தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்த பழனிமுருகன் (55) என்பவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார்.

கருப்பசாமியின் புரோட்டா கடைக்கு தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்த 4 பேர் அடிக்கடி சாப்பிட வருவது வழக்கம். அதோடு இந்த கும்பல் சாப்பிட்ட பின்பு பணம் கொடுக்காமலும் சென்று வந்துள்ளனர். இதனை கடையின் உரிமையாளர் கருப்பசாமி மற்றும் பொன்செந்தில் முருகன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் கருப்பசாமிக்கும், 4 பேர் கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

அரிவாளால் வெட்டிக் கொலை

இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு புரோட்டா கடைக்கு சாப்பிட வந்துள்ளனர். சாப்பிட்டு விட்டு வழக்கம்போல பணம் கொடுக்காமல் செல்ல முயன்றபோது, கருப்பசாமி மற்றும் பொன் செந்தில்முருகன், தேவராஜ், சாமுவேல் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் இரவு 11.45 மணி அளவில் மீண்டும் ஓட்டலுக்கு வந்த 4 பேர் கும்பல், சாமுவேலை அரிவாளால் வெட்டியது. இதனை தடுக்க வந்த பழனிமுருகனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதைப்பார்த்ததும் தேவராஜ், பொன் செந்தில்முருகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர். ஆனாலும் அவர்களை விடாமல் விரட்டிச்சென்ற அந்த கும்பல், ஆசிரியர் காலனி சந்திப்பு பகுதியில் வைத்து வழிமறித்து அவர்கள் 2 பேரையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பொன் செந்தில்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தேவராஜ் படுகாயம் அடைந்தார்.

4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சாமுவேல், பழனிமுருகன், தேவராஜ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை சூப்பிரண்டு சத்யராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பொன்செந்தில்முருகன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story