திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் தொங்கும் பதாகைகள்
திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் வீடு-கட்டிடம் வாடகைக்கு கிடைக்கும் என்ற பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன
பல்வேறு பிரச்சினைகளால் பனியன் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் வீடு-கட்டிடம் வாடகைக்கு கிடைக்கும் என்ற பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.
பனியன் நகரம்
வந்தாரை வாழ வைக்கும் நகரம் திருப்பூர். எத்தனை லட்சம் பேர் வேலை தேடி வந்தாலும் அத்தனைபேரையும் கரம் நீட்டி அரவணைத்துக்கொள்கிறது. திருப்பூர் சென்றால் வேலை உறுதி என்ன எண்ணம் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை உள்ள அனைவருக்கும் தெரிந்த வாசகம். திருப்பூரில் டீக்கடை முதல் பல்பொருள் அங்காடி வரை அனைத்துமே பனியன் தொழிலை ஆணிவேராக கொண்டு இயங்குகிறது. பின்னலாடை ஏற்றுமதி மற்றும் பனியன் உற்பத்தி அல்லாமல் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் பனியன் தொழிலையே சார்ந்துள்ளது. இதனால் அந்த தொழிலில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், அதனுடைய தாக்கம் ஒட்டு மொத்த திருப்பூரிலும் எதிரொலிக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சாய ஆலை, மின்வெட்டு பிரச்சினை, பஞ்சு தட்டுப்பாடு, தொடர் நூல் விலை உயர்வு பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களும், அதை சார்ந்துள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்களும் ஆர்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெறுவதால் ஏற்கனவே வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியவில்லை.
பதாகைகள்
விலைவாசி அதிகம் உள்ள திருப்பூரை பொறுத்த வரை பனியன் நிறுவனங்களில் 1 வாரம் வேலை இல்லை என்றாலே ஏழை மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பொருளாதார அளவில் சமாளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். இதனால் வேலை இழந்த தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருந்த வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோல் கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்தி வந்தவர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக ஏராளமான கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. இதன் காரணமாக திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் வீடு வாடகைக்கு, கடை வாடகைக்கு, கட்டிடம் வாடகைக்கு என்ற பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.
திருப்பூரின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதிகளிலும் இதுபோன்ற பதாகைகளை அதிக அளவில் காணமுடிகிறது. இதே நிலை நீடித்தால் பலகோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னிய செலாவணி ஈட்டி தரும் திருப்பூரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். கடந்த காலங்களில் பின்னலாடை தொழிலில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகளை கடந்து, அதை சாதனையாக மாற்றி பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ள பனியன் தொழில், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் என்ற இலக்கை நோக்கி செல்லும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை தொழிலுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன், தொழில் மீண்டும் எழுச்சி பெற்று பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.