வீடு புகுந்து ரூ1¼ லட்சம் நகை பணம் திருட்டு
திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து ரூ.1¼ லட்சம் நகை, பணம் திருட்டு மேலும் 3 வீடுகளில் திருட முயற்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் நெடுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரியநாயகம் மனைவி ஜெயமேரி(வயது 51). விவசாய கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று உறவினர் வீட்டில் இருந்து ஊருக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயமேரி உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருபோன நகை, பணத்தின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயமேரி கொடுத்த புகாரின் பேரில் மணலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜெபஸ்டின், எட்விட் வில்லியம் மனைவி அமலா மற்றும் இருதயம் மகன் வேளாங்கண்ணி ஆகிய 3 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது. ஒரே ஊரில் தொழிலாளி வீட்டில் நகை பணத்தை திருடிய மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் நெடுகம்பட்டு கிராமமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.