வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்-தேவிபட்டினம் கிராம மக்கள் பா.ஜனதாவினரிடம் கோரிக்கை
வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேவி பட்டினம் கிராமத்தை சேர்ந்த குருவிக்கார மக்கள் பா.ஜனதாவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பனைக்குளம்,
வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேவி பட்டினம் கிராமத்தை சேர்ந்த குருவிக்கார மக்கள் பா.ஜனதாவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மனு
இந்தியாவில் நீண்ட காலமாக அடிப்படை உரிமைகள் இன்றி பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் தகுதியை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குருவிக்காரர்கள் 450 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 1250-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த பகுதியின் கிராம தலைவர் பாண்டி, கிராம இளைஞர் அணி தலைவர் ராஜா ஆகியோர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கதிரவனை ராமநாதபுரத்தில் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான குறைகள் குறித்து மனு கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை அந்த மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜனதா மாவட்ட தலைவர் கதிரவன் வந்திருந்தார்.
வீட்டுமனை பட்டா
அப்போது அந்த கிராமத்தினர் பா.ஜ.க. தலைவர் கதிரவன், பா.ஜ.க. முக்கிய பிரமுகரும் உயர்நீதிமன்ற வக்கீலான சண்முகநாதன், பா.ஜ.க. மாநில இளைஞர் அணி செயலாளர் ஆத்மா கார்த்தி, மாவட்ட துணைத்தலைவர் சங்கீதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹேமா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மகா, மகளிர் அணி நாகலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள், பிரதமர் மோடி எங்கள் சமுதாயத்தை பழங்குடியினர் தகுதியை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக எங்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கி சாதி சான்றிதழ் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அப்போது மாவட்ட தலைவர் கதிரவன் பேசும்போது, உங்கள் தேவைகள் அனைத்தையும் பா.ஜனதா கட்சி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என்றார்.