வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஊட்டி
ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
கனமழை
நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் மாலையில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஊட்டியில் காலை முதலே வெயில் அடித்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை மாலை 3 மணி வரை சுமார் 2 மணி நேரம் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. கனமழையால் ஊட்டி நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
வெள்ளம் புகுந்தது
இதேபோல் ஊட்டி பட்பயர் பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து வீடுகளில் தேங்கி நின்ற தண்ணீரை வாளி மூலம் வெளியேற்றினர்.
ஊட்டி-கூடலூர் சாலை காமராஜ் சாகர் அணை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதேபோல் ஊட்டி-மஞ்சனக்கொரை சாலையில் விழுந்த மரமும் அப்புறப்படுத்தப்பட்டது.
2 வீடுகள் சேதம்
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இடி விழுந்ததில் மின்மாற்றி முற்றிலும் சேதமடைந்தது. இதனால் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில், மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி எப்ரொன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் பெர்னட் (வயது 70) என்பவரது வீட்டின் மேற்கூரை பறந்து சென்று, அருகில் இருந்த கார் மீது விழுந்தது. இதில் மூதாட்டி பெர்னட் காயமடைந்தார். பலத்த மழையால் பிரியதர்ஷினி என்பவரது வீடும் சேதம் அடைந்தது. இதையடுத்து தாசில்தார் ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறையினர் சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.4,500 நிவாரண உதவியாக வழங்கினர்.