ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்
நீலகிரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
வெளியேற உத்தரவு
தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நீலகிரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்குவதற்காக கூடலூர் அருகே நடுவட்டம் காலனியில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள டேன்டீயில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் நீண்ட காலமாக டேன்டீ குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இதனால் புதிய தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்க முடியாமல் உள்ளது. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது.
3 வாய்ப்புகள்
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது அறிவுறுத்தலின் பேரில் நீலகிரியில் அல்லஞ்சி, நடுஹட்டி, சேரங்கோடு பகுதியில் குடியிருப்புகளை காலி செய்யும் ஓய்வு பெற்ற 496 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 3 வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. வசதி வாய்ப்புக்கு ஏற்ப ரூ.5 லட்சம் செலுத்துபவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தத் தொகையை செலுத்த முடியாதவர்களுக்கு நடுவட்டம், சேரங்கோடு பகுதியில் அரசு நிலத்தில் தாமாக முன்வந்து வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், பட்டாவும் வழங்கப்படும். 3-வது வாய்ப்பாக நிலம் மட்டும் போதும் என்பவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். எனவே, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவரை டேன்டீ குடியிருப்புகளை காலி செய்வதற்கான பணி 3 மாதங்கள் வரை தள்ளி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு கூட்டம்
ஆய்வின் போது நீலகிரி எம்.பி. ஆ.ராசா, கலெக்டர் அம்ரித், டேன்டீ மேலாண்மை இயக்குனரும் (பொறுப்பு), முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான வெங்கடேஷ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ், இன்கோசர்வ் முதன்மை செயல் அலுவலர் மோனிகா ராணா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தருவது குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.