'மாணவர் மனசு' எப்படி? மனம் திறக்கிறார்கள் மாணவிகள்


அரசு பள்ளிகளில் ‘மாணவர் மனசு பெட்டி' அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறுகிறதா? என்பது குறித்து தலைமை ஆசிரியர், மாணவிகள், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை மனம் திறந்து பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரசு பள்ளிகளில் 'மாணவர் மனசு பெட்டி' அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறுகிறதா? என்பது குறித்து தலைமை ஆசிரியர், மாணவிகள், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை மனம் திறந்து பதிவு செய்துள்ளனர்.

'மாணவர் மனசு பெட்டி'

கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுதான் இந்த 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல பள்ளிகளில் உள்ள நிறை, குறைகள், மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது.

உடனுக்குடன் தீர்வு

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர்ஆகியோர்களைக் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி' யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காண்கின்றனர். சிறிய புகாரைக்கூட தட்டிக்கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர்.

எந்த நோக்கத்துக்காக இந்த 'மாணவர் மனசு பெட்டி' திட்டம் கொண்டுவரப்பட்டதோ?, அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக தலைமை ஆசிரியைகள், மாணவிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது

வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாரகேஸ்வரி:- 'மாணவர் மனசு பெட்டி'யில் மாணவிகள் போடும் புகார்களை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி ஒருவர் முன்னிலையில் திறந்து அதில் போடப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் இதுவரை வந்துள்ள அனைத்து குறைகளையும் நிறைவேற்றி உள்ளோம். குறைகளை சரிசெய்த பின்னர் மாணவிகள் பாராட்டு தெரிவித்தும் கடிதம் போடுகின்றனர். இதில் வரும் அனைத்து புகார்களும் சிறிய அளவிலேயே உள்ளது. அவற்றை நாங்கள் ஓரிரு நாட்களில் தீர்த்து விடுவோம் என்றார்.

வேலூர் அரசமரபேட்டையை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பொற்கொடி:-

'மாணவர் மனசு பெட்டி' திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த பெட்டியில் பெற்றோர், ஆசிரியர்களிடம் கூறமுடியாத விஷயங்களை தெரிவிக்க முடியும். இந்த பள்ளியில் உள்ள கரும்பலகைகள் மோசமான நிலையில் காணப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாக இருந்தது. இதுகுறித்து 'மாணவர் மனசு பெட்டி'யில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கரும்பலகைகள் சரிசெய்யப்பட்டு பெயிண்டு அடிக்கப்பட்டது. கழிவறைகளை சுத்தம் செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் சார்பனாமேட்டை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி சுபலட்சுமி:-

இந்த திட்டத்தின் மூலம் தெரிவிக்கப்படும் குறைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது. அதில் பள்ளியில் நூலகம் வசதி கேட்டும், வகுப்பறைகளில் உள்ள பெஞ்சுகளை சரிசெய்யவும் கடிதமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் நூலக வசதி ஏற்படுத்தி வாரம் ஒரு முறை மாணவிகள் நூலகம் சென்று புத்தகங்களை வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள பெஞ்சுகளும் சரிசெய்யப்பட்டது. இந்த புகார் பெட்டியில் மாணவிகளிடையே ஏற்படும் மோதல்கள் குறித்தும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவிகளிடம் பேசி பிரச்சினைகளை சரிசெய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த சாதியா பாத்திமா மற்றும் ஆற்காடு மாசா பேட்டையைச் சேர்ந்த திவ்ய ராணி ஆகியோர் கூறியதாவது:-

வகுப்பறையில் விளக்குகள் எரியவில்லை, மின்விசிறி இயங்கவில்லை, கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை போன்ற பிரச்சினைகள் குறித்து இந்த புகார் பெட்டியில் கடிதம் மூலம் தெரிவித்தோம். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றனர்.

தலை ஆசிரியை நிர்மலா கூறுகையில், பள்ளியில் கழிவறையை சுத்தப்படுத்த தனியாக ஆள் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியனிடம் தகவல் தெரிவித்த போது நகராட்சியில் பணிபுரியும் ஒரு ஆண், இரண்டு பெண் தூய்மை பணியாளர்களைக் கொண்டு தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளியிலேயே இருந்து அடிக்கடி கழிவறைகளை தூய்மை செய்கின்றனர். இதனால் கழிவறை சுத்தமாக உள்ளது என்றார்.

புகார்பெட்டி வைக்கப்படுவதில்லை

சின்ன தகரகுப்பத்தை சேர்ந்த பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் ருக்மணி முனிநாதன் கூறியதாவது:-

இத்திட்டம் தொடங்கப்பட்ட போது அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. தற்போது சில பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படுவதில்லை. ஒரு சில பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் மத்தியில் இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல பள்ளிகளில் இதற்கான குழு அமைக்கப்பட்டதா? என்பது கூட தெரியாத நிலை உள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர் மனசு புகார் பெட்டி வைக்கப்படுகிறதா, புகார்கள் போடப்படுகின்றதா, புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த புகார் பெட்டி குறித்து மாணவர்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா, என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போதுதான் இத்திட்டத்தை ஆரம்பித்ததன் பலன் தெரியவரும். மாணவர்களின் உண்மையான மனசு என்ன என்பதும் அப்போது தான் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மட்டும்...

அரக்கோணம் அரசினர் பள்ளி மாணவியின் தந்தை தவுலத் கூறியதாவது:-

மாணவர் மனசு என்ற பள்ளி மாணவர்களுக்கான புகார் பெட்டி பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வின் போது மட்டுமே வைக்கிறார்கள். மற்ற நாட்களில் அந்த பெட்டியை பார்ப்பதே அரிது. பள்ளிகளில் போதிய வகுப்பறைகள், ஆசிரியர்கள் குறைபாடு போன்றவை உள்ளது. அதனை தெரிவிக்க மாணவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. அரசு அறிவித்த இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று பள்ளிகளில் கண்காணிப்பதில்லை. இந்த திட்டம் பெயர் அளவுக்கே மாணவர் மனசாக உள்ளது. இந்த திட்டத்தால் மாணவர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. இது குறித்து மாணவர்களுக்கு கல்வித் துறை போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி எஸ்.பூஜா கூறியதாவது:-

பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு என்ற பெட்டி மிகவும் பயனுள்ள வரப்பிரசாதம் ஆகும். இதன் மூலம் எந்த குறைகள் இருந்தாலும் மனுவாக எழுதி அதில் போட்டால் அந்த குறைகளுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. எங்கள் வகுப்பறையில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் இருந்தது. இது குறித்து அந்த பெட்டியில் நாங்கள் கடிதம் எழுதிப் போட்டோம். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. இதே போல் ஆசிரியர்கள் அடித்தாலோ, பாடம் சரிவர நடத்தாமல் இருந்தாலோ அந்த பெட்டியில் தைரியமாக புகார் மனுவாக எழுதி போட முடிகிறது. நாங்கள் எங்கள் பெயரை குறிப்பிடாமல் புகார் எழுதிப் போடுவதால் யார் இந்த குறைகளை சொன்னது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாக புகார் அளித்து விட்டோம், ஆசிரியர்கள் என்ன செய்வார்களோ என்று பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இது மாணவ-மாணவிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி கூறுகையில், இது மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகும். வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகளை கூட இந்த பெட்டியில் எழுதி போடுவதால் அவர்களுக்கு தேவையான மன ரீதியான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவிகளை யாரும் கிண்டல், கேலி செய்தாலும் இதில் எழுதி போடுகின்றனர். மாணவ, மாணவிகளின் மன நிலையை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வழிகாட்டியாக இந்த பெட்டி உள்ளது என்றார்.

திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி திவ்ய ஸ்ரீபிரியா கூறுகையில், ஆசிரியர்களிடம் நேரடியாக சொல்ல முடியாத பிரச்சினைகளை இந்த 'மாணவர் மனசு பெட்டி'யின் மூலம் சொல்கிறோம். இதன் மூலம் எங்கள் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது என்றார்.

திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி கயல்விழி கூறுகையில், நான் நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றேன். எங்கள் பள்ளியில் 'மாணவர் மனசு பெட்டி' வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த 'மாணவர் மனசு பெட்டி' குறித்து பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை.

இது குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.


Next Story