'பொன்னியின் செல்வன்' படம் எப்படி?


பொன்னியின் செல்வன் படம் எப்படி?
x

நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்போடு திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்துகளை பரிந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை

ரசிகர்கள் கூட்டம் அலைமோதல்

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த 30-ந் தேதி வெளியானது. கல்கி எழுதிய புகழ்பெற்ற சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்', பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியான நாள் முதல் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் 'பொன்னியின் செல்வன்' வெளியான தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக காணப்படுகிறது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு

புதுக்கோட்டையில் பிரபல தியேட்டரில் நேற்று ஒரே நாளில் 5 காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் பெரும்பாலும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவதால் இருக்கைகள் பெரும்பாலும் நிரம்பிவிடுகிறது. கவுண்ட்டர்களில் டிக்கெட் பெற வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதேநேரத்தில் எந்த நாளில் டிக்கெட் காலியாக உள்ளது என கேட்டு முன்பதிவு செய்துக்கொண்டும் செல்கின்றனர். வருகிற 5-ந் தேதி வரை தியேட்டர்களில் டிக்கெட் விற்றுவிட்டதாம். இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

வரலாற்று படம்

புதுக்கோட்டையை சேர்ந்த விக்ரம்:- ''பிரபல நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களும், முன்னணி நடிகைகளான ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நடிகைகளும் நடித்திருப்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சோழ சாம்ராஜ்யம் பற்றிய படம் என்பதால் திரையில் படத்தை பார்க்க நன்றாக உள்ளது.

பொன்னியின் செல்வன் புத்தகத்தை நான் படிக்கவில்லை. ஆனால் படத்தை பாா்த்த போது கதையை புரிந்து கொண்டேன். படம் பிரமாண்டமாக உள்ளது. பழங்காலத்தில் உள்ளதை கண்முன்னே காட்டியது போல உள்ளது. வரலாற்று படமாக உள்ளது. காட்சிகளில் வரும் அனைத்து கதாபாத்திர நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். படம் சூப்பராக உள்ளது'' என்றார்.

இளைய சமுதாயம் தெரியும் வகையில்...

பொன்னமராவதியை சேர்ந்த சந்திரன் கூறுகையில், தமிழனின் வீரத்தை, அன்பை, காதலை நேர்த்திமிகு வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டிட கலையை, கடலில் நாவாய் செலுத்திய விதத்தை இசைமீதும் நடனத்தின் மீதும் கொண்ட பற்றை இன்றைய இளைய சமுதாயமும் தெரிந்து கொள்ளும் வகையில் திரைப்படம் மூலம் சொல்லியிருக்கிற செயலுக்கு வாழ்த்துகள் என்றார்.

எளிதில் புரிந்து கொள்ளலாம்

ஸ்வர்ணா:- ''இந்த படத்தை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன். எனது குழந்தைக்கு 2 வயது ஆகிறது. படம் நன்றாக உள்ளது. அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். எனது பாப்பா லக்‌ஷனாவுக்கு 2 வயது ஆகிறது. பாப்பாவை முதன் முதலாக இந்த படத்தை பாா்க்க அழைத்து செல்ல முடிவு செய்திருந்தோம். வராற்று படமான இதனை பார்க்கும் போது குழந்தையின் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக அழைத்து சென்றோம். இந்த நாவல் படிக்காதவர்களும் படத்தை பார்த்து எளிதில் புரிந்து கொள்ளலாம். படம் பார்த்த பின் 2-வது பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2-வது பாகத்தில் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை அறிய அந்த புத்தகத்தை படிக்க தற்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனை படித்தால் கதையை தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்

காரையூரை சேர்ந்த நீதி அரசன் சாதிக் கூறுகையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்களின் வரலாற்றை உலகிற்கே பறை சாற்றும் சிறந்த படம். பாகுபலி போன்ற கற்பனை கதைகளை காட்டிலும், சோழர்களின் பெருமையை பறைசாற்றிய திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய படமாகும். இந்த படம் குடும்பத்துடன் பார்க்க கூடிய திரைப்படமாகவும் உள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது சற்று பொறுமையாகவும், கவனமாகவும் பார்த்தால் மட்டுமே இதனுடைய அர்த்தம் புரியக்கூடியதாகவும் இருக்கிறது என்றார்.

வரலாறு பாடம் படிப்பது போலவே இருந்தது

விராலிமலையை சேர்ந்த கோபிநாத் கூறுகையில், பொன்னியின் செல்வன் படம் நன்றாக உள்ளது. அடுத்த பாகத்தில் தான் கதை முழுமையாக புரியும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படம் ஏற்கனவே புத்தகத்தில் படித்தது தான். அதில் உள்ளவாரே இந்த படத்தில் கதையை இயக்குனர் அமைத்துள்ளார் என்றார். இன்னும் சிலர் இப்படம் வகுப்பில் வரலாறு பாடம் படிப்பது போலவே இருந்தது என்றனர்.


Next Story