ஆசிரமம் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி?
ஆசிரமம் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம்:
கேரளாவை சேர்ந்த ஜூபின்பேபி, விக்கிரவாண்டி குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆதரவற்றோர் ஆசிரமத்தை கடந்த 2005-ம் ஆண்டில் ஆரம்பித்தார். பின்னர் அவர், தனது ஆசிரமத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களை சேர்த்துள்ளார். இதுதவிர தனது ஆசிரம பணியாளர்கள் மூலம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்பல்வேறு இடங்களிலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அனாதையாக சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களையும் கண்டறிந்து அவர்களை அழைத்து வந்து ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். இந்த ஆசிரமம் பல ஆண்டுகளாகவே உரிய அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குவிந்த நிதி
நாளடைவில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபிக்கு சில மருத்துவமனைகள் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் வெளிநாடுகளில் இருந்தும் நிதி குவிய ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டக்குப்பத்தில் மற்றொரு கிளை ஆசிரமத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த ஆசிரமத்தின் உள்ளே சென்றவர்கள் வெளியே வருவது மிக சிரமம் என்றே தெரிகிறது. இங்கு தங்க வைக்கப்பட்டவர்களை பார்ப்பதற்காக அவர்களது குடும்பத்தினரோ, உறவினர்களோ வந்தால் அவர்களை ஆசிரமத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. பலமுறை சென்று வற்புறுத்தி கேட்டாலும் அங்குள்ளவர்களை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். அதையும் மீறி துருவி, துருவி ஏதேனும் கேள்வி கேட்டால் உங்களுடைய உறவினர்களை பெங்களூர் உள்ளிட்ட வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி வந்துள்ளனர்.
குரங்குகளை விட்டு கடிக்க வைத்த கொடூரம்
இந்த ஆசிரமத்தில் பணியில் உள்ளவர்கள்கூட பணி முடிந்து நாள்தோறும் வீட்டிற்கு செல்வதில்லை என்பது தெரியவருகிறது. அனைவரும் ஒரு இறுக்கமான மனநிலையிலேயே இருந்துள்ளனர். தங்களின் உடல் இச்சைக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை மிரட்டியோ, மயக்கப்படுத்தியோ பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு வளர்க்கப்பட்டு வரும் குரங்குகளை வைத்து பயமுறுத்தியும், சில சமயங்களில் கூண்டுகளில் இருந்து குரங்குகளை திறந்துவிட்டு கடிக்க வைத்தும் மிரட்டியுள்ளனர். இதனால் வெளியில் சொல்வதற்கு உயிருக்கு பயந்து இருந்துள்ள நிலையில் அங்கு சமையலராக இருந்த கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது தோழி ஒருவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் புகார் தெரிவித்துள்ளனர்.
அசுர வளர்ச்சி
மேலும் உடல்நலமில்லாமல் வருபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சுடன் வரும் மருத்துவ உதவியாளர்களை ஆசிரமத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. ஆசிரமத்தில் வேலை செய்பவர்களே பெட்ஷீட்டில் தூக்கிவந்து ஆம்புலன்சில் கிடத்துவார்கள். 2005-ம் ஆண்டு முதல் இயங்கும் இந்த ஆசிரமம் ஆரம்ப காலத்தில் சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது அந்த ஆசிரமம் அடுக்குமாடி கட்டிடங்களாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசிரம நிர்வாகம் செய்ய ஆசிரமத்துக்கு வருவாய் எப்படி கிடைத்தது என்றும் தெரியவில்லை. அதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேற்கண்ட தகவல்கள், தீவிர விசாரணையில் இறங்கியுள்ள போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.