மாணவர்கள் மனசு எப்படி?
மாணவர்கள் மனசு எப்படி? என்பது குறித்து மனம் திறக்கிறார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி சில கருத்துகளை முன்வைத்தார்.
மாணவர் மனசு பெட்டி
அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்ததுதான் இந்த 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள், கல்விப்பாதையில் மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 நிதியையும் கல்வித்துறை ஒதுக்கியது.
உடனுக்குடன் தீர்வு
அதன்படி அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி'யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர். சிறிய புகாரைக்கூட தட்டிக்கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர். எந்த நோக்கத்துக்காக இந்த மாணவர் மனசு பெட்டி திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக கருத்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) பரமசிவன்:-
புகார்பெட்டி மூலம் புகார்களுக்கு உடனுக்கு உடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் எங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களின் நலனுக்காக எங்கள் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியை உள்ளிட்டோர் அயராது பாடுபட்டு வருகின்றோம்
விருதுநகர் எஸ்.எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள்:-
மாணவர்களின் மனசு பெட்டியில் தொடக்க நிலையில் புகார்கள் வர வாய்ப்பு இருந்தது. தற்போது அரசு அறிவுறுத்தியபடி பள்ளி மேலாண்மை குழு அமைத்த பின்பு ஒவ்வொரு மாதமும் மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுவதால் இக்கூட்டத்தில் ஆசிரியர்களும் பெற்றோரும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. எனவே தற்போது மாணவரின் மனசு பட்டியல் புகார்கள் ஏதும் வருவதில்லை.
ஒரே ஒரு மனு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு. வி.க.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா கூறியதாவது:-
எங்கள் பள்ளியை பொருத்தவரை ஒரே ஒரு மனு மட்டும் இருந்தது. அதில் ஒரு மாணவியின் உதவிகுறித்த மனு ஆகும். அதை நாங்கள் விசாரித்து அதற்கு உதவி செய்து சரி செய்து விட்டோம். இதுவரை புகார் ஏதும் போடப்படவில்லை. ஏனென்றால் எங்களது பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளிடம் நல்லுறவை வைத்துள்ளனர். இதனால் எந்த பிரச்சினையும் இன்றி நடத்தி வருகிறோம்.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ராணி:-
எங்கள் பள்ளியை பொருத்தமட்டில் மாணவரின் மனசு பெட்டியில் புகார்கள் ஏதும் வருவதில்லை. அதற்கு காரணம் மாணவிகளுக்கு பிரச்சினை ஏதும் ஏற்படாதவாறு மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏதேனும் மாணவர்களுக்கு பிரச்சினை என தெரிந்தால் உடனடியாக அவர்களுடன் பேசி தீர்வு காணப்படுகிறது.
பெற்றோர் பாலமுருகன்:- தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர் மனசு என்ற புகார் பெட்டியை அனைத்து பள்ளிகளிலும் வைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. அதில் வரக் கூடிய புகார்களை, தலைமை ஆசிரியர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் மாணவர் சமுதாயத்திற்கு ஏற்படும் இன்னல்கள், பாலியல் தொந்தரவுகள், பிரச்சினைகள் தீர்க்கப்படும். புகார்பெட்டி குறித்து தினமும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாணவன் முகமது இப்ராஹிம்:- பள்ளியில் புகார் பெட்டி வைப்பது நன்மை தான். மாணவ-மாணவிகள் நேரடியாக தெரிவிக்க முடியாத புகார்களை இ்ந்த பெட்டியின் மூலம் தெரிவிக்கலாம். நம்முடைய குறைகளை தெரிவிக்க அளிக்கப்படும் வாய்ப்பு என்பதால் புகார் பெட்டி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.
கவனம் செலுத்தவில்லை
சமூக ஆர்வலர் செல்வகுமார்:- பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக புகார் பெட்டி அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. புகார் பெட்டியில் மாணவர்கள் தைரியமாக தங்களது கருத்துக்களை எழுதிப் போட வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை பள்ளிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிடங்களில் போதுமான அளவிற்கு கவனம் செலுத்துவதில்லை. இந்த குறைகளை மாணவர்கள் நேரடியாக சொல்ல தயங்கும் போது புகார் பெட்டியில் தங்களது பெயர், வகுப்பை பதிவு செய்ய அவசியமில்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் குழு அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கு நலனாக அமையும்.