அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்தியவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? எடப்பாடி பழனிசாமி மீது துரைமுருகன் கடும் தாக்கு
அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? என்று எடப்பாடி பழனிசாமி மீது துரைமுருகன் கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னை,
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்தபோதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது 25-ந் தேதி (நேற்று முன்தினம்) அவர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிகிறது. மு.க.ஸ்டாலின் அரசை விமர்சித்து, வார்த்தைகளை அறிக்கையில் கொட்டி இருக்கிறார்.
ஆந்திர அரசு, ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக அம்மாநில முதல்-மந்திரி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் அரசு என்ன சாதித்துவிட்டது? என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டிருப்பதை பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
நிர்வாக செயல்பாடுகள்
இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப்போவதாக வந்த செய்தியை பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினும், நானும் கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை அரசு தீவிரமாக கண்காணித்துகொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும்.
இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்?. வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதை திரும்ப அள்ளுவது கஷ்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.