கர்நாடகாவில் பத்திரப்பதிவு எவ்வாறு நடக்கிறது? அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு


கர்நாடகாவில் பத்திரப்பதிவு எவ்வாறு நடக்கிறது? அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
x

கர்நாடகாவில் பத்திரப்பதிவு எவ்வாறு நடைபெறுகிறது? என்பதை தமிழ்நாடு அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை,

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பத்திரப்பதிவு மற்றும் ஆவண பதிவு நடைமுறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. மேலும் எளிமையான நடைமுறைகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் குறித்த ஆவணப் பதிவு எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே இந்த நடைமுறைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார்.

நேரில் ஆய்வு

அதன்பேரில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி தலைமையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று பெங்களூரு சென்றனர். அவர்கள், கர்நாடக அரசின் பதிவுத்துறை தலைவர் மம்தா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை சந்தித்து, 'அடுக்குமாடி கட்டிடங்கள் ஆவணப்பதிவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?' என்பது குறித்து கேட்டறிந்தனர்.

இந்த கூட்டம் முடிந்த பின்னர், மல்லேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு இந்த குழுவினர் சென்றனர். அங்கு பத்திரப்பதிவு எவ்வாறு நடைபெறுகிறது? என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன? என்பதையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.


Next Story