ஆட்சி எப்படி போய் கொண்டிருக்கிறது? மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கருத்து கேட்ட முதல்-அமைச்சர்
ஆட்சி எப்படி போய் கொண்டிருக்கிறது என்று மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து கேட்டார்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அந்த பெண்களின் குடும்ப சூழல் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய லட்சுமி,'பூக்கள் கட்டி வியாபாரம் செய்து வருகிறேன். எனது கணவர் ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். 2 குழந்தைகள் உள்ளனர். கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழு திட்டம் மூலமாக கடன் பெற்று ஆடுகள் வளர்த்து வருகிறேன். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் ரூ.1,000 உரிமை தொகை கிடைத்தால் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உதவும். குடும்பச் செலவுகளுக்கும் உதவியாக இருக்கும்' என்று கூறினார்.
கடவுளே நேரில்...
குடும்பத் தலைவி ராதிகா பேசும் போது, 'கிராமங்களில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் போதிய வருவாய் இல்லாமல் சிரமப்பட்ட நிலையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் உதவியாக உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களுக்கு மிகவும் பயனளிக்கும். எங்கள் ஊருக்கு வந்து எங்களிடம் நீங்கள் பேசுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுளே நேரில் வந்து வரம் கொடுத்தது போல் இருக்கிறது' என்றார்.
அப்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்களாக பேசுகிறீர்களா? அல்லது யாராவது சொல்லிக்கொடுத்து பேசுகிறீர்களா? என்று மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களிடம் கேட்டார். அப்போது யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. உங்களை பார்த்த மகிழ்ச்சியில் நாங்களாகவே பேசுகிறோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஆட்சி எப்படி?
அப்போது ஆட்சி எப்படி போய் கொண்டிருக்கிறது? என்று பெண்களிடம் முதல்-அமைச்சர் கருத்து கேட்டார். நன்றாக போய் கொண்டிருக்கிறது என்று பெண்கள் பதில் அளித்தனர்.