மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை செலவு எவ்வளவு? எடப்பாடி பழனிசாமி கேள்வி


மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை செலவு எவ்வளவு? எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டு உள்ளது என்பதை முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அப்படி ஒரு கோடி பேருக்குமேல் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டு இருந்தால், மருந்துக்காக மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டு உள்ளது என்றும், என்னென்ன நோய்க்கு, எந்த வகையான மருந்துகள் வாங்கப்பட்டு உள்ளன?.

ஒரு கோடி பயனாளிகளின் விவரங்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் விசாரித்தபோது, மாநில மருத்துவத் துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும்மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று செய்திகள் வந்துள்ளது.

எவ்வளவு ரூபாய் செலவு

மேலும் நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் 'டூப்ளிகேஷன்' - அதாவது ஒரே புள்ளி விவரம், இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனது அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, இந்த அரசு 'மக்களைத் தேடி மருத்துவம்' என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.

ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. அரசு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டு உள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story