எவ்வளவு மழை வந்தாலும், எவ்வளவு காற்றடித்தாலும் அரசு சமாளிக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை,
வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டது.
இதன் காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்தது. மாண்டஸ் புயலானது நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
இந்த நிலையில், நேற்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்ட்டவர்களிடம் அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கவனித்து, அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, எந்த மழை வந்தாலும், எந்த காற்று அடித்தாலும், அதை சமாளிப்பதற்கு, அதில் இருந்து மக்களை காப்பதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.
மாவட்டங்களில் ஒரு சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட வேண்டிய நிலை இன்னும் வரவில்லை. இருந்தாலும் மக்களுக்கு உரிய வகையில் எச்சரிக்கை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். அரசு மூலம் எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் புயல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.