தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
வடகிழக்கு பருவமழையையொட்டி தேயிலை செடிகளில் கொப்புள நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் விளக்கி உள்ளார்.
குன்னூர்,
வடகிழக்கு பருவமழையையொட்டி தேயிலை செடிகளில் கொப்புள நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் விளக்கி உள்ளார்.
கொப்புள நோய் தாக்குதல்
நீலகிரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் தேயிலை விவசாயத்திற்கு மத்திய அரசின் தேயிலை வாரியமும், மாநில அரசின் தோட்டக்கலைத்துறையும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்தது. தற்போது நீலகிரியில் 65 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை செடிகளுக்கு அதிக மழையும், அதிக வெயிலும் இருக்கக்கூடாது. இதன் காரணமாகவே தேயிலை செடிகள் மலை சரிவுகளில் பயிரிடப்படுகிறது.
தேயிலை செடிகளில் அசுவினி பூச்சி தாக்குதல், சிவப்பு சிலந்தி தாக்குதல், கொப்புள நோய் போன்றவை நோய்கள் தாக்கி வருகின்றன. இதில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் அறிவுரைகளை வழங்கி வருகிறது.தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அப்போது மழையின் காரணமாக சூரிய ஒளி இல்லாமல் மேகமூட்டம் அதிகளவு இருக்கும். இதனால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொப்புள நோயை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் தேயிலை மகசூல் அதிகளவில் பாதிக்கும்.
காற்றில் ஈரப்பதம்
இதுகுறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறியதாவது:-
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. தொடர் மழையினால் சூரிய ஒளி இல்லாமல் மேகமூட்டம் அதிகளவு இருக்கும். இதனால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
தேயிலை செடிகளில் 12 மணி நேரம் ஈரப்பதம் இருந்தாலும், சூரிய ஒளி 3 மணி நேரத்திற்கு குறைவாக இருந்தாலும், காற்றில் ஈரப்பதம் 80 சதவீதத்திற்கு மேல் நிலவினாலும் கொப்புள நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்த 210 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு, 200 மில்லி காண்டாப் ஆகிய மருந்துகளை ஒரு ஹெக்டேருக்கு 125 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.