நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் யோசனை வழங்கியுள்ளனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுனர் செங்குட்டுவன், பூச்சி, நோய் தொழில்நுட்ப வல்லுனர் ஜெயக்குமார் ஆகியோர் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொம்பன் ஈ

சம்பா பட்டத்தில் 40 நாட்களுக்கு மேல் உள்ள பயிர்களில் ஆணை கொம்பன் ஈ, இலை சுருட்டு புழு மற்றும் குருத்து புழு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த முதலில் ஒரு ஏக்கருக்கு கார்போசல்பான் 25 ஈ.சி. 400 மில்லி மற்றும் ஒட்டுதிரவம் 100 மில்லி சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம். அடுத்த ஒரு மாதத்திற்கு பூச்சிகள் எதுவும் பயிரில் வராது. அதன் பிறகு ஆணை கொம்பன் ஈ மற்றும் இலை சுருட்டு புழு, குருத்து புழு தாக்கம் இருந்தால் இரண்டாவது முறையாக பூச்சிக்கொல்லியை தெளிக்கும் போது, அதே பூச்சிக்கொல்லியை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

மாறாக அசிபேட் 75 டபல்யு ஜி 400 கிராம், ஒட்டுதிரவம் 100 மில்லி சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மூன்றாவது முறை தேவைப்பட்டால் கோராஜன் 18.5 எஸ்.சி. 60 மில்லி, ஒட்டுதிரவம் 100 மில்லி சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்

இளம் பருவத்தில் நடவு நட்ட 30 முதல் 40 நாட்களுக்குள் வரும் புகையான் மற்றும் இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் பிளானோகாமிட் 50 டபல்யு ஜி 60 கிராம், ஒட்டுதிரவம் 100 மில்லி சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இரண்டாவது முறை தேவைப்பட்டால் தயாமீதாக்சாம் 25 டபல்யு ஜி 40 கிராம், ஒட்டுதிரவம் 100 மில்லி சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேற்கண்ட பூச்சிகள் தாக்கப்பட்ட வயலில் நோய் தாக்கம் இருந்தால் கார்பன்டாசிம் 50 டபல்யு பி 200 கிராம் எடுத்து, மேற்கூறிய அனைத்து பூச்சிக்கொல்லிகளுடன் இதனையும் கலந்து தெளித்து நோய்களை கட்டுப்படுத்தலாம். பூச்சி நோய் கட்டுப்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story